Wednesday, March 28, 2012

உண்மை சம்பவம் : எதிரில் எதிரி

உண்மை  சம்பவம் : எதிரில் எதிரி

டிடிங்,டிடிங் என்று அழைப்பு மணி அலறியது.
சமயலறையில் வேலையில் இருந்த இருந்த சுகுணா சேலை தலைப்பில் கையை துடைத்தவாரே கதவை திறந்தாள். எதிரில் எதிர் வீட்டு துர்கா கோபத்துடன் நின்றாள். இவள் எதற்கு என் வீட்டு கதவை தட்டுகிறாள் என்று நினைத்தவாரே "என்ன ?" என்றாள்.

"நீ தான் என் வீட்டு கொடியை கழட்டின்னாயா ?"
"அது உங்க வீட்டு கொடியின்னு எனக்கு தெரியாது, ரொம்ப உயரம் குறைவாக இருந்தது. கட்டியிருந்த கொம்பும் உடைந்து இருந்தது. அதனால்தான் கழட்டி வைத்தேன்" என்றாள் சுகுணா.  

அதெப்படி நீ கழட்ட போயிற்று என்று பிடித்து கொண்டாள் துர்கா. எட்டு வீடு கேட்கும் படி காச்சு காச்சு என்று காச்சி எடுத்து விட்டு தான் அடங்கினாள்.
 சுகுணா எவ்வளவோ தான் வேணுமென்றே செய்யவில்லை என்றாலும் துர்கா கேக்கவில்லை. 

பிளாஷ் பேக்  
 சுகுணாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. எப்படி இருந்த துர்க்கா இப்படி ஆகிவிட்டாள். துர்க்கா மூடி டைப் தான். எதிர் வீடாக இருந்தாலும் வந்த புதிதில் சுகுணாவிடம் முகம் கொடுத்து பேச ஆரம்பிக்க வில்லை. "ஒருத்தி எதுத்த வீட்டில் இருக்கிறவங்க கிட்ட பாத்து சிரிக்க  கூடவா மாட்டா?" என்று கணவனிடம் அங்கலாய்தாள். மேல் வீட்டில் இருக்கும் ஜமுனா மூலமாகத்தான் மெதுவாக பேச ஆரம்பித்தாள். துர்காவின் மகன் ஒரு தடவை சுகுணாவின் குழந்தைகள் படிக்கும் போது அதை கெடுப்பது போல வீட்டுக்குள் வந்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தான்.
 அது சுகுணாவுக்கு பிடிக்காமல் "நீ போய் நாளைக்கு வா விளையாட"   என்று சொல்லி அவனை அனுப்பி கதவை சாத்தினாள். அது முதல் துர்கா சுகுணாவிடம் பேசவில்லை. சுகுணாவே துர்கவிடம் போய் "நான் என்ன தப்பு செய்தேன்னு இப்படி இருக்கீங்க?" என்று கண் கலங்க கேட்ட போது "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று சொன்னாலும் துர்கா பேசவே இல்லை.     

துர்காவின் கணவர் சேகர் ஆப்டெக்கில் பிரான்ச் மேனேஜர் ஆக இருந்தார். ஒரு பையன் துர்காவிற்கு. சேகர் ஒரு மாருதி வண்டி வைத்திருந்தார்.  அதை தினமும் காலையில் வாக்கிங் முடிந்த பிறகு கழுவி துடைத்து பிறகே மற்ற வேலை செய்வார். கேட்டால் நம்ம வண்டிய வச்சுக்கிற அழகப் பார்த்தாலே நம்ம எப்படின்னு தெரியனுங்க " என்பார். சுகுணாவிடமும் நன்றாக பேசுவார்.

துர்க்கா வந்து கத்தி விட்டு சென்ற பிறகு அழுகையுடன் தன் கணவருக்கு
போன் பண்ணி ஒரு பாட்டம் அழுது விட்டு நடந்ததை சொன்னாள்.
சுகுணாவின் கணவன்  தான் வந்து சேகரிடம் பேசுவதாக சொன்னான். அதுவும் சுகுணாவுக்கு நல்லதாக பட்டது. துர்கவிடம்  தன் கணவன் பேசி  அவனுடனும் ஒரு சண்டை போட்டாலும் போடுவாள்.சேகரிடம் பேசுவதே நல்லது என்று நினைத்துக்கொண்டாள்.

மறு  நாள் சேகர் காரை துடைத்து விட்டு வரும் போது சுகுணாவின் கணவன் சேகரை பார்த்து நடந்ததை சொல்லி, சாதாரண விஷயத்துக்கு இப்படி
ஓவர் ரியாக்ட் பண்ண வேண்டாம் என்று சொல்லி இனி ஏதும்
பிரச்னையென்றால் சேகர் தன்னிடமே சொல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டான். சேகரும் தன் மனைவியிடம் எடுத்து சொல்வதாக சமாதானம் சொன்னான்.
 
துர்க்கா அழுகை
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் சேகர் பெங்களூர் ஆபீஸ் டூர் சென்ற சமயமாக
துர்க்கா  சுகுணாவின் வீட்டை தட்டி சுகுணாவின் கணவனிடம்

"நீங்க என் வீட்டுகாரரிடம் என்ன பேசினீங்கன்னு தெரியல, உங்களால  எங்களுக்குள்ள பெரிய சண்டை" 

"நான் அன்னிக்கி நடந்த விஷயத்தை பத்தி தான் சொன்னேன். இனிமே 
எதுவானாலும் உங்க வீட்டுக்காரர் என்கிட்டே சொல்லட்டும்ன்னு தான் சொன்னேன்"    

"என் வீட்டுக்காரர் என்கிட்டே இப்படி சண்டை போட்டதே இல்லை. உங்களால் என் வாழ்கையே நாசமாயிடும் போல இருக்கு"  என்றாள். 

பிரச்னை வேறு மாதிரி செல்வதை அறிந்தவன் "சரி என்னால் உங்களுக்குள் பிரச்னை வேண்டாம். நான் சேகர் வந்ததும் பேசுகிறேன்" என்றான்.

ஒரு வாரம் கழித்து துர்க்கா வீட்டில் இருந்து "டொம்  டொம்மென்று சத்தம் கேட்டது. சேகர் இன்னும் பெங்களூரில் இருந்து திரும்பி இருக்கவில்லை. ஆனால் வீட்டில் ஆளரவம் தெரிந்தது. வேலையாட்கள்  சிலர்  பெட் ரூமில் இருக்கும் AC  யை கழற்றி கொண்டு இருந்தனர். அவர்களிடம் 
விசாரித்த போது "வீடு மாத்துராங்கமா" என்று சொல்லி விட்டு நடையை  கட்டினர்.

துர்காவின் அண்ணன்கள் வந்திருப்பது தெரிந்தது. மாலைக்குள் அனைத்தையும் 
காலி பண்ணி விட்டு போய் விட்டாள். இரவு வந்த கணவனிடம்  "என்னால்தான் அவள் வீட்டையே காலி பண்ணி விட்டு போய் விட்டாள்" என்று அழுதாள் சுகுணா. அவள்  கணவனோ "விடு இதில் நம்ம தப்பு எதுவும்    இல்லை. சேகர் இப்படி சண்டை போடுவார்ன்னு நமக்கு தெரியவா  செய்யும். எங்க இருந்தாலும் அவங்க ரெண்டு பெரும் நல்லா இருக்கட்டும். தினம் தினம் சண்டைக்காரி முகத்தில் முழிக்கிற கொடுமையாவது  இப்போ இல்லை " என்று சொன்னான்.                 

ஷாக்கான சேகர்   
இது நடந்து முடிந்த பிறகு வந்த சனி கிழமை சேகர் பெங்களூரில் இருந்து  வந்து இறங்கினார். சரி முழுவதும் காலிபண்ணவில்லை  போலிருக்கிறது. 
மிச்சம் இருப்பதை எடுத்து கொண்டு  போறார் என்று நினைத்தாள்  சுகுணா. சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த  சேகர் பேய்  அறைந்தவனை போல்  போன் மேல் போன்  போட்டு யாரிடமோ பேசினான். பின்பு சுகுணாவிடம் வந்து "துர்க்கா எங்கே போறேன்னு சொல்லிட்டு போனாளா ?" என்று கேட்கவும் சுகுணாவிற்கு தூக்கி வாரி  போட்டது  "என்னது வீடு காலி பண்ணியது உங்களுக்கு  தெரியாதா?" என்று கேட்டாள். "எனக்கு   எதுவும் தெரியாது அன்னைக்கு  போனவன்   இப்போ தான்   வரேன்"  என்றான். சரியாய் போச்சு என்று துர்க்கா வந்து தன் கணவனிடம் பேசியதை சொன்னாள். "நானும் கொஞ்சம் ஹார்ஷ் ஆக  பேசிட்டேன்" என்றான் சேகர். சரி இப்படி ஆனாலும் அவங்க அம்மா வீட்டுக்கு தான் போய் இருப்பாள் போய் கூட்டி  வாருங்கள் என்றாள் சுகுணா. 

சுகுணாவுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. "இப்படியா ஒருத்தி
புருஷனுக்கு தெரியாம வீட்டையே காலி பண்ணிட்டு போவா?" என்று பினாத்தி கொண்டிருந்தாள். போன சேகர் திரும்பி வந்தார் தனியாக.
கேட்டபோது துர்கா தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும், அவளுடைய 
அண்ணன்கள் தான் அவள் உன்னுடன் வாழ மாட்டாள்  என்றும்,  அவன் மீது வரதட்சணை கொடுமை பண்ணியதாக போலீசில் புகார் பண்ணி 
இருப்பதாக சொன்னார். தன் மகன் கூட தன்னிடம் சரியாக பேசவில்லை 
என்றார். என்னடா தலை வலி போய் திருகு வலி வந்த கதை ஆகி  விட்டதே என்று நினைத்தாள் சுகுணா. சேகர் தன் துணியை மட்டும் விட்டு விட்டு தன் கார் மற்றும் பைக்கை கூட எடுத்து சென்று விட்டாள் என்று சொன்னார்.  

உண்மை தெரிந்தது            

துர்க்கா சுகுணாவிடம் தான் சண்டை போட்டிருந்தாலும் மேல் வீட்டு ஜமுனாவிடம் நல்லா பழகி கொண்டு இருந்தாள்.  இந்த களேபரம் எல்லாம் முடிந்து ஒரு நாள் ஜமுனா சுகுணா வீட்டிற்க்கு சென்று "உங்களுக்கு விஷயம் தெரியுமா  ?" என்று ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன விவரம் இதுதான் "சேகர் ஒரு செலவாளி. வாங்கும்    சம்பளத்துக்கு   ஏற்ப குடும்பம் நடத்தாமல், கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல்  லோன் வாங்கி செலவு செய்கிறானாம். இருக்கின்ற கார் பைக் கூட அதில் வாங்கியது தானாம். அவன் சென்னைக்கு  வந்ததே ஊரில் வாங்கிய  கடனை  அடைக்கத்தான். ஆனால் அவன் இங்கும் எல்லா பாங்கிலும் பர்சனல் லோன் வாங்கி இருக்கிறான். அதனால் தான், துர்கா எல்லாத்தையும் வழித்து  எடுத்துக்கொண்டு  போய் விட்டாள்".

சுகுணாவால் நம்பவே முடியமில்லை சேகரா இப்படி. தினம் காரை சுத்தமாக
கழுவும் அவன் முகம் வந்து போனது. சுத்தம் காரில் மட்டும் தானா? 

பின் குறிப்பு

1) சேகருக்கும் துர்க்காவுக்கும் டைவேர்ஸ் ஆகி விட்டது.

2) பெங்களூர் போன சேகர் அதற்கப்புறம் சென்னை பக்கமே எட்டி  
    பாக்கவில்லை.

3) துர்கா திரும்பவும் சுகுணா இருக்கும் அதே ஏரியாவில் குடியேறி
    இருக்கிறாள். தனியாக வேலைக்கு போய் தன் மகனை படிக்க
   வைக்கிறாள்.

4) துர்காவின் மகனும் சுகுணாவின் குழைந்தைகளும் ஒரே பள்ளியில்  
    இப்போது படிக்கிறார்கள்.

5) இப்போதும் சுகுணாவின் வாசலில் "மேடம் எதிர் வீட்டில் சேகர்ன்னு
    ஒருத்தர் பர்சனல் லோன் வாங்கிட்டு கட்டவே இல்லை, உங்களுக்கு அவர் 
    அட்ரஸ் தெரியுமா ?" என்று பேங்க் ஏஜெண்டுகள் கேட்டு 
    கொண்டிருக்கின்றனர்.        

6) சேகர் பர்சனல் லோன் மூலம் பாங்குகளை ஏமாற்றி இருக்கும் தொகை 
     மட்டும் அறுபது லட்சம் 

இப்போது சொல்லுங்கள் சுகுணாவின் எதிரில் இருந்த எதிரி  துர்க்காவா  சேகரா?

Tuesday, March 20, 2012

நாட்டு நடப்பு : ரயில்வே ஸ்மார்ட் கார்டு



கடந்த வாரம் குடும்பத்துடன் பல்லாவரம் போக வேண்டி இருந்ததால், ரயிலில் போக முடிவெடுத்தோம். மாலை 5.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் போனால் டிக்கட் எடுக்க மூணு வரிசையில், ஒவ்வொரு வரிசையிலும் மினிமம் அம்பது பேர் இருந்தனர். நானும் ஒரு அனுமார் வாலில் போய் ஜாயின் பண்ணி கொண்டேன். எனக்கு முன்னால் ஒரு T - Shirt போட்ட இளம் பெண். என் மனைவி "நாங்கள் பிளாட்பார்மில்  வெயிட் பண்ணுகிறோம், ஒழுங்கா (இதுக்கு மட்டும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து) டிக்கெட் வாங்கிட்டு வாங்க என்று முன்னாள் இருக்கும் இளம் பெண்ணை பார்த்த படியே சொல்லி விட்டு சென்றார்.

அழகான இளம் பெண்ணாக மட்டும் பிறக்க கூடாது. க்ராஸ் ஆகும் ஒவ்வொரு ஆணும் அந்த பெண்ணை நன்றாக பார்த்து விட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். எஸ்க்யுஸ்  மி என்று இரு பெண்கள் எங்களை கடந்து சென்றனர், வரிசையில் முந்தி நுழைந்து விடப்போகின்றனரோ என்று பார்த்தால் ஒரு மிசின் முன்னால் போய் நின்று ஒரு கார்டை வைத்து டச் ஸ்க்ரீனில் ஏதோ செலக்ட் பண்ணி ஓர் பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு போய் விட்டனர். விசாரிக்கும் போது அது புதிதாக வந்திருக்கிற SMART கார்டு என்றார்கள். இது நான் சிங்கப்பூரில் இருக்கும் போது தினம் யூஸ் பண்ணியதுதான். சிங்கப்பூரில் மனித வளம் குறைவு அதனால் முடிந்த வரை ஆட்டோமேட் பண்ணி விடுவார்கள்.

எப்படி வாங்குவது 

நான் டிக்கெட் வாங்கும்போதே  கார்டையும் வாங்கி விட்டேன். சென்னையில் இருக்கும் எல்லா ரயில் நிலையங்களிலும் கொடுகிறார்கள். ரூ 100 கட்டி இந்த கார்டை வாங்கினால் ரூ 50 செக்யூரிட்டி டெபாசிட் மற்றும் ரூ 52 இல் டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.    
 
இதனால் என்ன நன்மை.

கியூவில் நிற்க தேவை இல்லை.  நேராக அந்த மிசினுக்கு சென்று கார்டை அதற்கு உரிய இடத்தில வைத்து விட்டு தற்போதய ஸ்டேஷன் மற்றும் செல்ல வேண்டிய ஸ்டேஷன் செலக்ட் பண்ணினால், உங்கள் கார்டில் இருந்து உரிய அமௌண்டை எடுத்துக் கொண்டு டிக்கெட்டை கொடுத்து விடும்.

மிசின் எங்கெல்லாம் இருக்கிறது 

எனக்கு தெரிந்த வரை பல்லாவரம், மாம்பலம், நுங்கம்பாக்கம், எக்மோர் ரயில் நிலையங்களில் உண்டு. மற்ற நிலையங்களில் இருக்க நிறைய சான்ஸ் உண்டு. பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் பகிரவும்.

என்ன பிரச்னை வரலாம் 

மிசின் ரிப்பேர் ஆகி ரயில்வே நிர்வாகம் அதை சரி செய்ய தாமதம் ஆனால் திரும்ப கியுக்கு வரவேண்டிய கட்டாயம் மட்டுமே.

ஆனால் துணிந்து வாங்கிவிட்டேன், இது மாதிரியான Technology improvement ஐ நாம் வரவேற்க வேண்டும்.  வரவேற்றால்தான் அரசும் இது மாதிரியான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும். 

இந்த கார்டை திரும்ப ரயில்வே கவுன்டரில் கொடுத்து பணத்தை திரும்ப வாங்கிகொள்ளும் வசதியும் உண்டு.

Sunday, March 18, 2012

ஹோட்டல் பிரவேசம் : மேடவாக்கம் ஹோட்டல் பாரதி

ஹோட்டல் பாரதி


சோழிங்கநல்லூர் ஜங்ஷன் இல் இருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில் உள்ள எல்காட் SEZ இல் வேலை பார்க்கிறேன். சில சமயம் சனி, ஞாயிற்றுகிழமைகளில் கூட வேலை நீண்டால் மதிய சாப்பாடு SEZ ல் கிடைக்காது.வெளியே OMR சாலையில் அமராவதியிலோ, HOT சிப்சிலோ மதிய சாப்பாடு முடியும். ஒரு மாற்றத்திற்காக மேடவாக்கம் பக்கம் போகலாம் என்று போனேன். குளோபல் ஹாஸ்பிடல் தாண்டினால் ஒரு BEND வரும் அந்த இடத்தில் உள்ளது இந்த ஹோட்டல். 

வாசலிலேயே சைனீஸ் மீல்ஸ், தந்தூரி மீல்ஸ் கிடைக்கும் என்று எழுதி
இருந்தார்கள். சைனீஸ் மீல்ஸ் ஆர்டர் பண்ணினேன். அதிக நேரம் எடுக்காமல் உடனே வந்தது.   

  1) வெஜ் பிரைடு ரைஸ் 
  2) வெஜ் நூடுல்ஸ்
  3) கோபி மன்சூரியன் 2 வகை            
  4) கோபி 65 
  
கோபி மன்சூரியன் 2 வகையுமே மிக நன்றாக இருந்தது. வெஜ் நூடுல்ஸ்ம்
சூப்பர். கோபி மன்சூரியன் தனியாக வாங்கினால் ரூ 60 ஆகும். ஆனால்
இதில் மூணு வகை இருந்தாலும் விலை ரூ 85 மட்டுமே. ஒரே குறை ரைஸ் அளவு குறைவாக இருப்பது தான்.          

இது தவிர சாதாரண மீல்ஸ் ரூ 50, தந்தூரி மீல்ஸ் ரூ 60 (என்று நினைக்கிறன்) இருக்கிறது. கொடுத்த காசுக்கு வொர்த்.

தரம்    : ***
சுவை   : ****
காசுக்கு 
வொர்த் : ****        

Tuesday, March 13, 2012

பு(து)த்தகம் :கோல்



அறிமுகமே அட்டகாசமாக இருக்கிறது இந்த புத்தகத்தில்.

அலெக்ஸ்  ரெகோஒரு பிளான்ட்டின் மேனேஜெர். ஒரு நாள் 
அதி காலை பிளான்ட்க்கு வரும் அவர்,அவருடைய பாஸ் ஏற்கனவே அவருடைய அறையில் இருப்பதை கேள்விப்பட்டு பதட்டத்துடன் அவர் அறைக்கு செல்கிறார். 

பாஸின் கெடு
==============

பில் பீச் தான் ரெகோவுடைய  பாஸ். கறாரான பேர்வழி. வேலை ஆகவேண்டும் இல்லை என்றால் வெட்டி விடவேண்டும் என்ற பாலிசி உள்ள ஆள். அவர் காலங்கார்த்தால தன் அறையில் இருக்கிறார் என்றால் ஏதோ ப்ராப்ளம். அந்த ப்ராப்ளம் ரெகோவுக்கு தெரிந்தே இருக்கிறது. அவனுடைய பிளான்ட் நஷ்டத்தில் இருக்கிறது. அது மொத்த கம்பெனிக்கும்    பெரிய ப்ராபளமாகிக் கொண்டிருக்கிறது என்று ரெகோவுக்கும் தெரியும்.

பில் பீச், ரெகோ உட்காரும்  சேரில் அட்டகாசமாக உட்கர்ந்து கொண்டு இருந்தது ரெகோவின் கோபத்தை மண்டைக்கு ஏற்றியது. 

ரெகோ: (கோபத்துடன்) அது என் சேர்

பில் : உன் பிளான்ட்டே மூழ்கிக் கொண்டிருக்கிறது உன் சேரை பற்றி கவலை படுகிறாய். இன்றிலிருந்து மூணு மாதத்தில் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தா விட்டால் இந்த பிளான்ட்டை மூட நான் CEO விடம் பரிந்துரை செய்து விடுவேன். 

ரெகோ: மூணு மாத அவகாசம் ரொம்ப குறைவு.

பில் : ஆனால் உன் பிளான்ட்டை விட நம் கம்பெனி முக்கியம். மூணு மாதம். மூணே மாதம்.

என்று சொல்லியவாரே  பில் போயே போய் விட்டான்.  

ரெகோவுக்கு இடி விழுந்தால் போல இருந்தது. இதை எப்படி சமாளிக்க போகிறேன் என்று நினைத்தவாரே ஜன்னலின் வழியே பார்த்தான். தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தது 
தெரிந்தது. தான் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தாவிட்டால்  தன் வேலை மட்டுமல்ல தன் கீழே வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை போய் விடும்.  அவர்களது குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும்.  கடவுளே என்று கடவுளை கூப்பிடுவதை தவிர வேறெதுவும் தெரியவில்லை.
=======================================================================
இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடந்தால் நாம் என்ன செய்வோம். உடனே  ஜாப் சைட்டில்வேலை தேட ஆரம்பித்து விடுவோம் அல்லது நம் பிரண்ட்சுக்கு போன் பண்ணி "மச்சான் உன் கம்பெனியில் எனக்கு ஒரு வேலை பார்த்து கொடுடா"  என்று ஆரம்பித்து விடுவோம். ஆனால்  ரெகோ  அப்படி செய்யவில்லை. அவர் தன் பிளான்ட்டை நேசித்தார். என்ன ஆனாலும் இந்த பிளான்ட்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று  முடிவு செய்தார். தன் பிளான்ட்டை எப்படி  தன்  காலேஜ் ப்ரொபசர் ஜோனா  உதவியுடன் எப்படி காப்பாற்றினார் என்பதே கதை.

இது ஒரு நாவல் + மேலாண்மை சம்பந்தமான  புத்தகம் . மேலாண்மை சம்பந்தமான புத்தகம் என்றால் அட்வைசாக அள்ளி தெளித்து விட்டிருப்பார்கள். ஆனால்  இந்த புத்தகம் ஒரு நாவலும் கூட என்பதால் மிக எளிதாக விளங்குகிறது. எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவு எழுத்து நடை. விகடனில் தொடர் கதையாக வந்த போதே இதை படித்தேன். புத்தக கண்காட்சியில் இப்போது  வாங்கினேன். ஷ்யாமின் வண்ண ஓவியங்களுடன் மிக நன்றாக இருக்கிறது. 

ஏன் படிக்கவேண்டும் : எந்த ஒரு பெரியவேலையுமே சின்ன சின்ன வேலைகளால் ஆனது. இந்த சின்ன சின்ன வேலைகள் எப்படி பெரிய வேலை முடிவடைவதை கட்டுபடுத்து கிறது என்பதே எந்த புத்தகத்தின் அடி நாதம். நாம் நம் வேலை ஏன் சொன்ன நேரத்தில் முடிவடைய வில்லை என்பதை தோண்டி துருவும்போது இந்த புத்தகத்தை எடுத்து படித்தால் விடை கிடைக்கும். Theory of constraints பற்றியும் bottle neck centers  பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.  


உதாரணத்துக்கு ஒரு கார் கம்பெனியில் ஒரு காரை உருவாக்க ஆயிரக்கணக்கான  உதிரி பாகங்கள் தேவை.  இதில் ஒரு உதிரி பாகம் இல்லை என்றால் கூட  கார் முழுமை அடையாது . ஒரு உதிரி பாகத்துக்காக ஒரு காரை விற்பனை செய்யகூடிய வாய்ப்பு போய்விடுகிறது. ஒரு இல்லாத உதிரி பாகம் கார் விற்பனை ஆவதையே தடுத்து விடுகிறது. 

இப்போது அந்த கார் கம்பெனியில் எல்லோரும் ஓவர் டைம் போட்டு அந்த ஒரு பாகத்தை தவிர மற்ற பாகங்களை உருவாக்கினால், அந்த கம்பெனி நல்ல  நிலைமையில் போய்க் கொண்டிருப்பதாக அர்த்தமா? அதாவது அந்த கம்பனியின்  கோல்  என்ன  என்று தெரியாமல் அவரவர் வேலையை செய்தால் அந்த
கம்பெனி   உருப்பட முடியாது . அந்த கம்பெனியின் கோல் காரை விற்பது. இது எல்லாருக்கும் புரிந்தால் இல்லாத பாகத்தின் முக்கியத்துவம்  எல்லாருக்கும்  தெரியும். 


நம் எல்லோருடைய வாழ்கையிலும் இந்த புத்தகத்தில் சொல்லி இருப்பதை செயல் படுத்த முடியும் என்பது இந்த புத்தகத்தின் சிறப்பு.

எழுதியவர் : கோல்ட்ராத் இலியாஹு  

இவர் ஒரு இஸ்ரேல் நாட்டு மேலாண்மை குரு. மேலாண்மையில் இவர் எழுதிய புத்தகங்கள் சக்கை போடு போடுகின்றன. பல நிறுவனங்களை இவர் தன் மேற்பார்வையில் முன்னேற்றி இருக்கிறார். 2011 ம் ஆண்டு காலமானார்.  

தமிழில் : அஞ்சனா தேவ்


பிரசுரம் : விகடன்

விலை : ரூ 110   
=======================================================================


  

Tuesday, February 28, 2012

நாட்டு நடப்பு : மின் விடுமுறை


*** நான் எந்த திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கும் அனுதாபி அல்ல. சாமானிய மனிதனாக இருந்து பிரச்சனைகளை நையாண்டி 
செய்வதும் நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்க 
வைப்பதும்தான் இந்த பதிவின் நோக்கம். கட்சி அனுதாபியாக இல்லாமல் ஒரு நிமிடம் பிரச்சனையை யோசித்து விட்டு படியுங்கள்***

சான்சே இல்லை. அம்மா ராக்ஸ். பரீட்சை விடுமுறைகிறிஸ்துமஸ்  
விடுமுறையை தான் எங்களுக்கு  தெரியும். மின் விடுமுறையும் அளித்த  அம்மாவுக்கு வணக்கம். இனிமே ஒரு பய அம்மா தமிழுக்காக  ஒண்ணும்  செய்யலேன்னு சொல்ல முடியாது. மின்விடுமுறை என்ற புது தமிழ்  சொல்லே அம்மாவால் உருவாகி இருக்கிறது. மின் தடை, மின் வெட்டு  என்று எதிர்மறை வார்த்தைகளை விட்டு விட்டு மின் விடுமுறை என்று நம்மை ஒரு கொண்டாட்ட உணர்வை தூண்டும் நேர்மறை வார்த்தையை
 உருவாக்கி தந்து இருக்கிறார்.

ஏற்கனவே சோகத்தில் இருக்கும் கோயம்புத்தூர், திருப்பூர்  ஆலை
முதலாளிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிய வில்லை. ஆனால்
படிக்கும் பிள்ளைகளை பாதிக்காமல் இருக்க டீசலுடன் ஜெனரேட்டர் தர  இருக்கிறார். கந்தன் சாவடியை தாண்டும் பொது ஒரு ப்ளெக்ஸ் பேனர்
"மாற்றம் தந்த அம்மா, ஏற்றம் தரும்  தலைவி"    என்றது.  உண்மைதான் பஸ் கட்டண ஏற்றம், மின் கட்டண ஏற்றம் என்று தினம்  தினம் ஏற்றமாகதான்  இருக்கிறது. வெற்றி  பெற்ற பின் குஜராத்தில் இருந்து  மின்சாரம் குதித்து வரும்காற்றாலை மின்சாரம் பறந்து  வரும் 
என்றவர்கள் பஞ்சாய் பறந்து விட்டார்கள்.


இங்கே எப்படி இருக்க குஜாரத்தில் மோடி கருங்கல்லில் இருந்து மின்சாரம் எடுத்து விடுவார்  போலிருக்கிறது. நர்மதா ஆற்றின் கால்வாய்களின் மேலே 1  கிலோ மீட்டர் தூரத்துக்கு சோலார் பேனல் வைத்து
மூடி இருக்கிறார்கள்.   இதனால் நான்கு நன்மைகள்.

1) சுத்தமான சுற்றுபுறத்தை பாதிக்காத மின்சாரம் கிடைக்கிறது.
2 ) அருகில் இருக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது.
3) முக்கியமாக கால்வாயில் ஓடும் நீர் சூரிய ஒளியால் ஆவியாவது தடுக்க படுகிறது. இதன் மூலம் 100 ,000  லிட்டர் நீர் ஒரு வருடத்தில் ஆவியாவது தவிர்க்கபடுகிறது.               
4) மிக முக்கியமாக கால்வாயின் மேல் பதிப்பதால் தனியாக நிலம்
கையகப்படுத்த வேண்டியதில்லை.  

மோடியை இந்த விசயத்தில் பாராட்டதான் வேண்டும். நம்ம கூவத்தை
சோலார் பேனல்  கொண்டு மூடினாலே போதும் போல இருக்கு. நாற்றமும் போகும் மின்சாரமும் கிடைக்கும். கொஞ்சம் யோசிங்கப்பா

சரி நம்ம இந்த விஷயத்தில் என்ன செய்யலாம்
 1 ) தேவை  இல்லாத AC ,Fan மற்றும் விளக்குகளை அணைக்கலாம்.

 2) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த  அதே குண்டு  பல்பு வைத்துக்கொண்டு பல்பு வாங்காமல், CFL விளக்குகளை பயன் படுத்தலாம்.
இதற்கு ஆகும் மின் செலவு குறைவு. என்னோட சாய்ஸ் Philips தான்.
 ஒரு வருட வாரண்டியும் உண்டு.   இருபதே வாட்டில் ஒரு அறையை ஒளிர செய்யலாம்.

3) தொலைக்காட்சியை ரிமோட் கொண்டு மட்டும் அணைக்காமல், அதற்கு வரும் மின்சாரம் கொடுக்கும் சுவிட்சையும்   சேர்த்து அணைக்கலாம். இது நாம் அனைவரும் செய்யும் தவறு.

4) குளிர் காலங்களில் AC யை குறைத்து வைக்கலாம். குறிப்பிட்ட நேரம் மட்டும் இயங்குமாறு வைத்து கொள்ளலாம்.

5) LED லைட்களை  கைவிளக்குகள், கழிவறையில் மற்றும் குளிக்கும்
அறையில் உபயோகிக்கலாம்.

6) ஏதோ ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளை கொடுத்ததாக தொலைக்கட்சியில் காட்டினார்கள். அது
மாதிரி வாங்கி வைத்து கொள்ளலாம்.

7)  வெயில் இப்போதே சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. ஹீட்டர் போடாமல் குளித்து பழகலாம்.        

8) சாலை விளக்குகள் விடிந்த பின்னும் எரிந்தால் மாநகராட்சிக்கு தொலை பேசியில் சொல்லலாம். மாநகராட்சியும் சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகளை அமைக்கலாம்.


மின் உபயோகத்தில் பொட்டி தட்டும் கம்பனிகளுக்கு   பெரும் பங்கு உண்டு. அதனால் மின்சிக்கனத்திலும்  அவற்றிக்கு பங்கு உண்டு.  பொட்டி தட்டும் கம்பெனிகள் என்ன செய்யலாம் 

1) முடிந்த வரை தொழிலாளர்களை வீட்டிலிருந்து மடிக்கணினி மூலம் 
வேலை செய்ய அனுமதிக்கலாம். இதனால்  விளக்குகளுக்கு, கணினிக்கு ,
 AC க்கு மற்றும் லிப்ட்க்கு ஆகும் மின்சாரம் மிச்ச படுத்தப்படும்.  வாகன நெரிசலும்   கணிசமான அளவு குறையும்.     

2 ) குளிர் காலங்களில் AC யை குறைத்து வைக்கலாம். 

3) ஆள் இருந்தால் மட்டும் எரியும் விளக்குகளை உபயோகிக்கலாம்.   

4) வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் AC யை நிறுத்தி விடலாம். 

5) வீட்டிற்கு கிளம்பும்போது கணினியை அணைத்து விட்டு போவதை
கட்டாயமாக்கலாம்.  

6)  நிறைய இடம் இருக்கும் கம்பெனிகள் சூரிய சக்தி மூலம் மின்சாரம்
 தயாரிக்கலாம். 

எவ்வளவு தான் நானே சொல்லுறது நீங்களும் தெரிந்தவற்றை சொல்லுங்கள். 


அடுத்த பதிவு பு(து)த்தகம் - நான் படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்  

Wednesday, February 22, 2012

முதல் பதிவு : தமன்னாவின் ரயில் பயணம்

 
ண்டேன் காதலை படத்தில் தமன்னா பரத்துடன் ரயிலின் பேசுமிடம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் ஒரு இடத்தில் "இந்த First Class எனக்கு பிடிக்காது.  ஒரே அமைதியா இருக்கு, செகண்ட் கிளாசில் தான் ஒரே சத்தமா இருக்கும். கொய்யா பழம், முறுக்கு. சுண்டல் எல்லாம் வரும். சில பேர் சண்டை போடுவாங்க, சில பேர் ரொமான்ஸ் பண்ணுவாங்க. குழந்தைங்க அங்க இங்க ஓடிகிட்டு இருக்கும்.  அந்த இடமே lively ஆக இருக்கும்  என்பார்.  நேற்று எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது. மஹா சிவராத்ரியை அருப்புகோட்டையில் கொண்டாடி விட்டு மதுரையிலிருந்து குருவாயூர் எக்ஸ்ப்ரஸில் சென்னை திரும்பும் போது தமன்னா சொன்ன அனைத்து அனுபவமும் கிடைத்தது.
Sleeper கிளாஸ் கிடைக்கததால் செகண்ட் சிட்டிங்கில் புக் பண்ணியிருந்தேன். ஜெனரல் கம்பார்ட்மென்ட் என்று நினைத்துக் கொண்டு திமு திமு என்று மக்கள் ஏறினார்கள். TTR பாவம் அந்த கூட்டத்தை சமாளிக்க ரொம்ப கஷ்டப்பட்டார். சென்னை MTC பஸ்சில் கூட்டத்தில் இடையே வந்து டிக்கெட் கேட்க்கும் கண்டக்டர் ஞாபகம் வந்தது. 

செகண்ட் சிட்டிங்கில் சென்னையில் இருக்கும் எலெக்ட்ரிக் ட்ரெயின் மாதிரி நடுவே செல்லும் வழி, இரு பக்கமும் இருக்கைகள் என இருக்கும். சீட்டில் மூன்று பேர் உக்கார வேண்டும்  ஆனால் குண்டான ஆட்கள் ரெண்டே பேர் தான் உக்கார முடியும். எதிர் எதிர் சீட்டில் விண்டோ சீட் தவிர மற்ற இருக்கைகள் எங்களுக்கு அல்லாட் ஆகி இருந்தது.ஒரு ஜன்னல் ஓரமாக ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார்.   அவர் அருகில் நானும்,    எதிரில் உள்ள சீட்டில்  என் குடும்பமும்  அமர்ந்தோம். 


இளைஞர் காலை டைட்டாக வைத்துக்கொண்டு  இடத்தை maintain பண்ணிக் கொண்டு   உட்க்கார்ந்திருந்தார்.   எதிர் விண்டோ சீட் காலியாக இருக்கவே அதையும் நாங்கள் எடுத்துக்கொண்டோம். நடுவில் இருக்கும் வழியை  அடுத்த சீட்டில் ஒரு டை அடித்த அங்கிள், ஆன்ட்டி மற்றும் அவர்களது +2  படிக்கும் இளம் பெண். அவர்களுக்கு எதிரில் ஒரு இளம் தம்பதியினர்.   இவர்கள் பின்னாடி ஒரு சீட்டில் ஒரு கணவன் மனைவி மட்டும் இருந்தார்கள்.மூன்று பேர் அமர கூடிய சீட்டில் இந்த இரண்டு பேர் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார்கள்.பின்னாடி தான் தெரிந்தது மூன்று இருக்கையையும் அந்த அண்ணன்,அவர்கள் இருவருக்காக வாங்கி இருக்கிறார்.


எதிர் சீட் ஆள்
==============
திண்டுக்கல்லில் எதிர் விண்டோ சீட்டுக்கு அந்த ஆள் வந்தார். மாற்றிக்கொள்ள சொல்லி கேட்டபோது நான் விண்டோ சீட்டுன்னாதான் மாறுவேன் என்றார். விண்டோ சீட்க்கு யாரையும் கேக்க விருப்பம்  இல்லாததால் அவரையே  எதிர் விண்டோ சீட்டில் உக்கார  சொன்னோம்.    அவர் ஏன் விண்டோ சீட்டை விரும்பினார் என்பது அப்புறம்தான் தெரிந்தது.  நின்று  கொண்டிருந்தவர்கள் சீட்டின் மீது நன்றாக சாய்ந்து நிற்க ஆரம்பிக்கிறார்கள்.  டீ விற்பவர்கள் வேறு அடிக்கடி தங்கள் டீ  கேன்னால்  சூடு மற்றும் இடி கொடுக்கிறார்கள். பையை தோளில் சுமந்து வருபவர்கள் மண்டையை பதம் பார்கிறார்கள்.


சண்டை
=========
நடுவில் நிற்பவர்கள் சீட்டில் சாய்ந்து கொண்டு நின்றது, உக்கார்ந்து  இருப்பவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.  கேவலம் ஒரு டிக்கட் வாங்கிய எங்களுக்கே இப்படின்னா மூன்று டிக்கட் வாங்கிய அண்ணன் சும்மா இருப்பாரா? சாய்ந்து நிற்பவரை பார்த்து கோபமாக தள்ளி நிற்க சொல்ல, பதிலுக்கு அவர் கோபமாக பேச என்று சண்டை ஆரம்பித்தது.  கோபத்தில் கெட்ட வார்த்தையை  அண்ணன் ஆரம்பித்து வைக்க,  நின்றவர்  வழிமொழிந்து கெட்ட  வார்த்தைகள்  மழையாய் பொழிந்தது.


இவர்கள் மனைவிகள் இருவரும்,   மழை பொழியும் இருவரையும் "ஏங்க விடுங்க, ஏங்க விடுங்க" என்று சமாதானப்படுத்த முயன்று "நீ சும்மா இருடி, இவன நான் ரெண்டுல ஒண்ணு பார்கிறேன்" என்று வாங்கி கட்டி கொண்டிருந்தார்கள். அண்ணன் கொஞ்சம் வளத்தி கம்மி அதனால் சீட் மேலே  ஏறி குதிக்க ஆரம்பித்தார். எங்களுக்கும் அப்படா என்று இருந்தது. எவ்வளவு நேரம்தான் அண்ணனோட தலைய மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பது. :-) அட்ரா சக்க அட்ரா சக்க என்று மனம் கும்மாளம் போட்டது. கூட்டம் வழக்கம் போல இரு பிரிவாக பிரிந்து அண்ணனையும், நின்று கொண்டிருந்தவரையும் கண்ட்ரோல் பண்ணி மூன்றாம் உலக போர் நிகழாமல் காப்பற்றினார்கள்.  இதில்   கஷ்ட்டப் பட்டது      என்னமோ அவர்கள் மனைவிகள் தான்.

அங்கிள் - ஐ காணோம்
=======================
டை அடித்த அங்கிள் திருச்சியில் ஏதாவது வாங்க இறங்கினார். மனுஷன் ட்ரெயின் புறப்படும் போதும் வரவில்லை, புறப்பட்ட பின்னும்  வரவில்லை. அருகில் நின்ற  காவலரிடம் சொன்னால், அங்கிள் ஏதாவது கோச்சில் ஏறி இருப்பார்  என்று சொன்னார். நாங்களும் அப்படி தான் நம்பினோம். ஆனால் அவர் பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை. ஆண்ட்டி "பாவி மனுஷன் டிக்கெட்டையும் பர்சையும் கையிலேயே கொண்டு போயிட்டாரே" என்றும் " அவருக்கும் கவனமா இருக்குறதுக்கும் காத தூரம், ஏதாவது புத்தக கடையை பார்த்த அப்படியே நின்னுடுவார்." என்று அங்கிளை டேமேஜ் செய்து கொண்டிருந்தார். நேரமாக ஆக "அவர் ஓடி வந்து ஏறும் போது விழுந்து கிழுந்து தொலைத்திருப்பாரோ?  செயினை பிடித்து இழுத்துடலமா" என்று கேட்டார். +2 படிக்கும் பொண்ணோ "அம்மா சும்மா பிடித்து இழுத்தால் ரூ 1000 பைன்" என்றாள்.  ஆண்டிக்கு எதிரில் உக்கார்ந்திருந்த இளம் கணவன் அதற்குள் "நான் இந்த பக்கம் போய் பார்த்து விட்டு வருகிறேன்" என்று போனார். நான் அவர் போன பக்கத்துக்கு எதிர் பக்கம் போய் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆண்ட்டி கண் கலங்க  ஆரம்பித்து விட்டார். ஒரு வழியாக அசட்டு சிரிப்புடன் அங்கிள் வந்தார்.  வந்துட்டார் வந்துட்டார் என்று எல்லாரும் பேச,  வந்த அங்கிள் கேட்டாரே ஒரு கேள்வி "ஏன் இவ்வளவு டென்சன், இந்த கோச் இல்லேனா அடுத்த கோச்" என்றார்   கூலாக. எல்லோரும் கடுப்பாகிட்டோம். ஆண்ட்டிக்கு அங்கிள்-ஐ பார்வையாலேயே எரிக்க முடியாத கோபம்.


சற்று நேரத்தில் ஆண்ட்டி கோபம் குறைந்து அங்கிள் - இன் இமேஜை டேமேஜ் பண்ண ஆரம்பித்தார். இவர் இப்படிதான் என்று பழைய நினைவுகளை தூசி தட்ட ஆரம்பிக்க, அங்கிள் முகத்தில் அசடு டன் டன் ஆக வழிய ஆரம்பித்தது. உடனே எதிரே இருந்த இளம் மனைவி தன் கணவனும் அப்படிதான் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார். இந்த பெண்களே இப்படிதான் பேச்சு சுவாரசியத்தில் தங்களை தாங்களே டேமேஜ் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். சிக்னல்லுக்காக ட்ரெயின் அடிக்கடி நிற்கும்போது "அங்கிள் - ஐ வெளியே போயிட்டு வர சொல்லுங்க ஆண்டி. சீக்கிரம் வண்டியை எடுத்துடுவான்" என்று நாங்களும் எங்கள் பங்குக்கு அங்கிள் - ஐ வாரினோம்.  ஆண்டியும், அவர்கள் எதிரில் இருந்த தம்பதியும் மிக அன்யோன்யமாக ஆகி விட்டார்கள். ஆபத்து சமயத்தில் உதவி செய்பவர்கள் உற்ற நண்பர்களாகி விடுகிறார்கள்.  

அருகில் இருந்த இளைஞர்
============================
திண்டுகல்லில் அருகில் இருந்த இளைஞர் எங்களுக்காக தன் இடத்தை மாற்றிக்கொண்டு ஆண்ட்டி எதிரில் போய் அமர்ந்தார். அவ்வபோது எழுந்து நின்று மற்றவர்களுக்கும் இடம் கொடுத்தார்.  இடத்தை maintain பண்ணிக் கொண்டு  உட்க்கார்ந்திருந்தார் அன்று முதலில் குற்றம் சொன்ன என் மனது எப்போது அவரை வாழ்த்த ஆரம்பித்தது.


பெண் பேங்க் மேனேஜர்
=========================
விருத்தாசலம் சந்திப்பில் ஒரு பெண் பேங்க் மேனேஜர் ஏறினார். மிடில் ஏஜ் ஆகத்தான் இருந்தார். வாடிக்கையாக ஏறுபவர் போலிருக்கிறது. கொய்யா பழம் விற்கும் பெண் காசு வாங்காமல் அவர் கையில் ஆறு பழங்களை கொண்ட பையை திணித்து விட்டு சென்றாள். நாங்கள் ஆச்சர்யமாக அவரை பார்க்க நான் வாடிக்கையாக வருவேன். அந்த பெண்ணுக்கு நானும் ஏதாவது வாங்கி கொண்டு வந்து தருவேன், அதான் எனக்கு காசு வாங்க வில்லை என்றார். கொய்யா பழம் விற்கும் பெண்ணுக்காக நகரத்தில் இருந்து வாங்கி வரும் நல்ல உள்ளம் வாழ்க. வேலைக்கு சேர்ந்து 20 வருடங்களுக்குள் நன்றாக சேமித்து விடவேண்டும்,  இல்லை என்றால் என்னை போல் ஓடி கொண்டிருக்க வேண்டியது தான் என்றார். மாம்பலத்தில் வீடு,  விருத்தாச்சலத்தில்  வேலை.  காலையில்  3 .3 0 க்கு எழுந்து 6 மணிக்கு ட்ரெயின் பிடித்து பேங்க் போய் சேர  9   மணி  ஆகி விடும். மாலை 6  மணிக்கு கிலாம்பினால் வீடு சேர  9   அல்லது 10   மணியாகி விடும் என்றார். தினம் 4 .3 0  மணி நேரம் தூக்கம் தான் என்றார். மனது கஷ்டமாக இருந்தது. சரியாக பிளான் பண்ணாமல்  செலவளித்தால்  இந்த கதி தான் போலிருக்கிறது. 

இந்த பயணத்தில் கற்றதும்  பெற்றதும் 
=====================================
1 ) டிக்கெட்டை xerox  எடுத்து உங்களுடன் பயணம் செய்யும் குடும்ப உறுப்பினர்களிடம் கொடுத்து வையுங்கள்.
2 ) கொஞ்சம் காசையும் குடும்ப உறுப்பினர்களிடம் கொடுத்து வையுங்கள்.
3 ) யாரையும் இவர் இப்படிதான் என்று பார்த்தவுடன் முடிவு செய்யாதீர்கள். 
4 ) 20 வருடங்களுக்குள் நன்றாக சேமித்து விடுங்கள்.
5 ) சக பயணிகளிடம் உங்கள் பிரச்சனையை மெதுவாக சொல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்வார்கள். 
6 ) இவர்கள் ஒருவர் பெயர் கூட எனக்கு தெரியாது, இருந்தாலும் அவர்கள் எனக்கு ஆசான்கள்.  

இது என் முதல் பதிவு உங்கள் உண்மையான விமர்சனங்களை  வரவேற்கிறேன்.  வோட்டு   போட மறக்காதீர்கள். நன்றி !