Tuesday, February 28, 2012

நாட்டு நடப்பு : மின் விடுமுறை


*** நான் எந்த திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கும் அனுதாபி அல்ல. சாமானிய மனிதனாக இருந்து பிரச்சனைகளை நையாண்டி 
செய்வதும் நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்க 
வைப்பதும்தான் இந்த பதிவின் நோக்கம். கட்சி அனுதாபியாக இல்லாமல் ஒரு நிமிடம் பிரச்சனையை யோசித்து விட்டு படியுங்கள்***

சான்சே இல்லை. அம்மா ராக்ஸ். பரீட்சை விடுமுறைகிறிஸ்துமஸ்  
விடுமுறையை தான் எங்களுக்கு  தெரியும். மின் விடுமுறையும் அளித்த  அம்மாவுக்கு வணக்கம். இனிமே ஒரு பய அம்மா தமிழுக்காக  ஒண்ணும்  செய்யலேன்னு சொல்ல முடியாது. மின்விடுமுறை என்ற புது தமிழ்  சொல்லே அம்மாவால் உருவாகி இருக்கிறது. மின் தடை, மின் வெட்டு  என்று எதிர்மறை வார்த்தைகளை விட்டு விட்டு மின் விடுமுறை என்று நம்மை ஒரு கொண்டாட்ட உணர்வை தூண்டும் நேர்மறை வார்த்தையை
 உருவாக்கி தந்து இருக்கிறார்.

ஏற்கனவே சோகத்தில் இருக்கும் கோயம்புத்தூர், திருப்பூர்  ஆலை
முதலாளிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிய வில்லை. ஆனால்
படிக்கும் பிள்ளைகளை பாதிக்காமல் இருக்க டீசலுடன் ஜெனரேட்டர் தர  இருக்கிறார். கந்தன் சாவடியை தாண்டும் பொது ஒரு ப்ளெக்ஸ் பேனர்
"மாற்றம் தந்த அம்மா, ஏற்றம் தரும்  தலைவி"    என்றது.  உண்மைதான் பஸ் கட்டண ஏற்றம், மின் கட்டண ஏற்றம் என்று தினம்  தினம் ஏற்றமாகதான்  இருக்கிறது. வெற்றி  பெற்ற பின் குஜராத்தில் இருந்து  மின்சாரம் குதித்து வரும்காற்றாலை மின்சாரம் பறந்து  வரும் 
என்றவர்கள் பஞ்சாய் பறந்து விட்டார்கள்.


இங்கே எப்படி இருக்க குஜாரத்தில் மோடி கருங்கல்லில் இருந்து மின்சாரம் எடுத்து விடுவார்  போலிருக்கிறது. நர்மதா ஆற்றின் கால்வாய்களின் மேலே 1  கிலோ மீட்டர் தூரத்துக்கு சோலார் பேனல் வைத்து
மூடி இருக்கிறார்கள்.   இதனால் நான்கு நன்மைகள்.

1) சுத்தமான சுற்றுபுறத்தை பாதிக்காத மின்சாரம் கிடைக்கிறது.
2 ) அருகில் இருக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது.
3) முக்கியமாக கால்வாயில் ஓடும் நீர் சூரிய ஒளியால் ஆவியாவது தடுக்க படுகிறது. இதன் மூலம் 100 ,000  லிட்டர் நீர் ஒரு வருடத்தில் ஆவியாவது தவிர்க்கபடுகிறது.               
4) மிக முக்கியமாக கால்வாயின் மேல் பதிப்பதால் தனியாக நிலம்
கையகப்படுத்த வேண்டியதில்லை.  

மோடியை இந்த விசயத்தில் பாராட்டதான் வேண்டும். நம்ம கூவத்தை
சோலார் பேனல்  கொண்டு மூடினாலே போதும் போல இருக்கு. நாற்றமும் போகும் மின்சாரமும் கிடைக்கும். கொஞ்சம் யோசிங்கப்பா

சரி நம்ம இந்த விஷயத்தில் என்ன செய்யலாம்
 1 ) தேவை  இல்லாத AC ,Fan மற்றும் விளக்குகளை அணைக்கலாம்.

 2) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த  அதே குண்டு  பல்பு வைத்துக்கொண்டு பல்பு வாங்காமல், CFL விளக்குகளை பயன் படுத்தலாம்.
இதற்கு ஆகும் மின் செலவு குறைவு. என்னோட சாய்ஸ் Philips தான்.
 ஒரு வருட வாரண்டியும் உண்டு.   இருபதே வாட்டில் ஒரு அறையை ஒளிர செய்யலாம்.

3) தொலைக்காட்சியை ரிமோட் கொண்டு மட்டும் அணைக்காமல், அதற்கு வரும் மின்சாரம் கொடுக்கும் சுவிட்சையும்   சேர்த்து அணைக்கலாம். இது நாம் அனைவரும் செய்யும் தவறு.

4) குளிர் காலங்களில் AC யை குறைத்து வைக்கலாம். குறிப்பிட்ட நேரம் மட்டும் இயங்குமாறு வைத்து கொள்ளலாம்.

5) LED லைட்களை  கைவிளக்குகள், கழிவறையில் மற்றும் குளிக்கும்
அறையில் உபயோகிக்கலாம்.

6) ஏதோ ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளை கொடுத்ததாக தொலைக்கட்சியில் காட்டினார்கள். அது
மாதிரி வாங்கி வைத்து கொள்ளலாம்.

7)  வெயில் இப்போதே சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. ஹீட்டர் போடாமல் குளித்து பழகலாம்.        

8) சாலை விளக்குகள் விடிந்த பின்னும் எரிந்தால் மாநகராட்சிக்கு தொலை பேசியில் சொல்லலாம். மாநகராட்சியும் சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகளை அமைக்கலாம்.


மின் உபயோகத்தில் பொட்டி தட்டும் கம்பனிகளுக்கு   பெரும் பங்கு உண்டு. அதனால் மின்சிக்கனத்திலும்  அவற்றிக்கு பங்கு உண்டு.  பொட்டி தட்டும் கம்பெனிகள் என்ன செய்யலாம் 

1) முடிந்த வரை தொழிலாளர்களை வீட்டிலிருந்து மடிக்கணினி மூலம் 
வேலை செய்ய அனுமதிக்கலாம். இதனால்  விளக்குகளுக்கு, கணினிக்கு ,
 AC க்கு மற்றும் லிப்ட்க்கு ஆகும் மின்சாரம் மிச்ச படுத்தப்படும்.  வாகன நெரிசலும்   கணிசமான அளவு குறையும்.     

2 ) குளிர் காலங்களில் AC யை குறைத்து வைக்கலாம். 

3) ஆள் இருந்தால் மட்டும் எரியும் விளக்குகளை உபயோகிக்கலாம்.   

4) வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் AC யை நிறுத்தி விடலாம். 

5) வீட்டிற்கு கிளம்பும்போது கணினியை அணைத்து விட்டு போவதை
கட்டாயமாக்கலாம்.  

6)  நிறைய இடம் இருக்கும் கம்பெனிகள் சூரிய சக்தி மூலம் மின்சாரம்
 தயாரிக்கலாம். 

எவ்வளவு தான் நானே சொல்லுறது நீங்களும் தெரிந்தவற்றை சொல்லுங்கள். 


அடுத்த பதிவு பு(து)த்தகம் - நான் படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்  

Wednesday, February 22, 2012

முதல் பதிவு : தமன்னாவின் ரயில் பயணம்

 
ண்டேன் காதலை படத்தில் தமன்னா பரத்துடன் ரயிலின் பேசுமிடம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் ஒரு இடத்தில் "இந்த First Class எனக்கு பிடிக்காது.  ஒரே அமைதியா இருக்கு, செகண்ட் கிளாசில் தான் ஒரே சத்தமா இருக்கும். கொய்யா பழம், முறுக்கு. சுண்டல் எல்லாம் வரும். சில பேர் சண்டை போடுவாங்க, சில பேர் ரொமான்ஸ் பண்ணுவாங்க. குழந்தைங்க அங்க இங்க ஓடிகிட்டு இருக்கும்.  அந்த இடமே lively ஆக இருக்கும்  என்பார்.  நேற்று எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது. மஹா சிவராத்ரியை அருப்புகோட்டையில் கொண்டாடி விட்டு மதுரையிலிருந்து குருவாயூர் எக்ஸ்ப்ரஸில் சென்னை திரும்பும் போது தமன்னா சொன்ன அனைத்து அனுபவமும் கிடைத்தது.
Sleeper கிளாஸ் கிடைக்கததால் செகண்ட் சிட்டிங்கில் புக் பண்ணியிருந்தேன். ஜெனரல் கம்பார்ட்மென்ட் என்று நினைத்துக் கொண்டு திமு திமு என்று மக்கள் ஏறினார்கள். TTR பாவம் அந்த கூட்டத்தை சமாளிக்க ரொம்ப கஷ்டப்பட்டார். சென்னை MTC பஸ்சில் கூட்டத்தில் இடையே வந்து டிக்கெட் கேட்க்கும் கண்டக்டர் ஞாபகம் வந்தது. 

செகண்ட் சிட்டிங்கில் சென்னையில் இருக்கும் எலெக்ட்ரிக் ட்ரெயின் மாதிரி நடுவே செல்லும் வழி, இரு பக்கமும் இருக்கைகள் என இருக்கும். சீட்டில் மூன்று பேர் உக்கார வேண்டும்  ஆனால் குண்டான ஆட்கள் ரெண்டே பேர் தான் உக்கார முடியும். எதிர் எதிர் சீட்டில் விண்டோ சீட் தவிர மற்ற இருக்கைகள் எங்களுக்கு அல்லாட் ஆகி இருந்தது.ஒரு ஜன்னல் ஓரமாக ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார்.   அவர் அருகில் நானும்,    எதிரில் உள்ள சீட்டில்  என் குடும்பமும்  அமர்ந்தோம். 


இளைஞர் காலை டைட்டாக வைத்துக்கொண்டு  இடத்தை maintain பண்ணிக் கொண்டு   உட்க்கார்ந்திருந்தார்.   எதிர் விண்டோ சீட் காலியாக இருக்கவே அதையும் நாங்கள் எடுத்துக்கொண்டோம். நடுவில் இருக்கும் வழியை  அடுத்த சீட்டில் ஒரு டை அடித்த அங்கிள், ஆன்ட்டி மற்றும் அவர்களது +2  படிக்கும் இளம் பெண். அவர்களுக்கு எதிரில் ஒரு இளம் தம்பதியினர்.   இவர்கள் பின்னாடி ஒரு சீட்டில் ஒரு கணவன் மனைவி மட்டும் இருந்தார்கள்.மூன்று பேர் அமர கூடிய சீட்டில் இந்த இரண்டு பேர் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார்கள்.பின்னாடி தான் தெரிந்தது மூன்று இருக்கையையும் அந்த அண்ணன்,அவர்கள் இருவருக்காக வாங்கி இருக்கிறார்.


எதிர் சீட் ஆள்
==============
திண்டுக்கல்லில் எதிர் விண்டோ சீட்டுக்கு அந்த ஆள் வந்தார். மாற்றிக்கொள்ள சொல்லி கேட்டபோது நான் விண்டோ சீட்டுன்னாதான் மாறுவேன் என்றார். விண்டோ சீட்க்கு யாரையும் கேக்க விருப்பம்  இல்லாததால் அவரையே  எதிர் விண்டோ சீட்டில் உக்கார  சொன்னோம்.    அவர் ஏன் விண்டோ சீட்டை விரும்பினார் என்பது அப்புறம்தான் தெரிந்தது.  நின்று  கொண்டிருந்தவர்கள் சீட்டின் மீது நன்றாக சாய்ந்து நிற்க ஆரம்பிக்கிறார்கள்.  டீ விற்பவர்கள் வேறு அடிக்கடி தங்கள் டீ  கேன்னால்  சூடு மற்றும் இடி கொடுக்கிறார்கள். பையை தோளில் சுமந்து வருபவர்கள் மண்டையை பதம் பார்கிறார்கள்.


சண்டை
=========
நடுவில் நிற்பவர்கள் சீட்டில் சாய்ந்து கொண்டு நின்றது, உக்கார்ந்து  இருப்பவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.  கேவலம் ஒரு டிக்கட் வாங்கிய எங்களுக்கே இப்படின்னா மூன்று டிக்கட் வாங்கிய அண்ணன் சும்மா இருப்பாரா? சாய்ந்து நிற்பவரை பார்த்து கோபமாக தள்ளி நிற்க சொல்ல, பதிலுக்கு அவர் கோபமாக பேச என்று சண்டை ஆரம்பித்தது.  கோபத்தில் கெட்ட வார்த்தையை  அண்ணன் ஆரம்பித்து வைக்க,  நின்றவர்  வழிமொழிந்து கெட்ட  வார்த்தைகள்  மழையாய் பொழிந்தது.


இவர்கள் மனைவிகள் இருவரும்,   மழை பொழியும் இருவரையும் "ஏங்க விடுங்க, ஏங்க விடுங்க" என்று சமாதானப்படுத்த முயன்று "நீ சும்மா இருடி, இவன நான் ரெண்டுல ஒண்ணு பார்கிறேன்" என்று வாங்கி கட்டி கொண்டிருந்தார்கள். அண்ணன் கொஞ்சம் வளத்தி கம்மி அதனால் சீட் மேலே  ஏறி குதிக்க ஆரம்பித்தார். எங்களுக்கும் அப்படா என்று இருந்தது. எவ்வளவு நேரம்தான் அண்ணனோட தலைய மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பது. :-) அட்ரா சக்க அட்ரா சக்க என்று மனம் கும்மாளம் போட்டது. கூட்டம் வழக்கம் போல இரு பிரிவாக பிரிந்து அண்ணனையும், நின்று கொண்டிருந்தவரையும் கண்ட்ரோல் பண்ணி மூன்றாம் உலக போர் நிகழாமல் காப்பற்றினார்கள்.  இதில்   கஷ்ட்டப் பட்டது      என்னமோ அவர்கள் மனைவிகள் தான்.

அங்கிள் - ஐ காணோம்
=======================
டை அடித்த அங்கிள் திருச்சியில் ஏதாவது வாங்க இறங்கினார். மனுஷன் ட்ரெயின் புறப்படும் போதும் வரவில்லை, புறப்பட்ட பின்னும்  வரவில்லை. அருகில் நின்ற  காவலரிடம் சொன்னால், அங்கிள் ஏதாவது கோச்சில் ஏறி இருப்பார்  என்று சொன்னார். நாங்களும் அப்படி தான் நம்பினோம். ஆனால் அவர் பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை. ஆண்ட்டி "பாவி மனுஷன் டிக்கெட்டையும் பர்சையும் கையிலேயே கொண்டு போயிட்டாரே" என்றும் " அவருக்கும் கவனமா இருக்குறதுக்கும் காத தூரம், ஏதாவது புத்தக கடையை பார்த்த அப்படியே நின்னுடுவார்." என்று அங்கிளை டேமேஜ் செய்து கொண்டிருந்தார். நேரமாக ஆக "அவர் ஓடி வந்து ஏறும் போது விழுந்து கிழுந்து தொலைத்திருப்பாரோ?  செயினை பிடித்து இழுத்துடலமா" என்று கேட்டார். +2 படிக்கும் பொண்ணோ "அம்மா சும்மா பிடித்து இழுத்தால் ரூ 1000 பைன்" என்றாள்.  ஆண்டிக்கு எதிரில் உக்கார்ந்திருந்த இளம் கணவன் அதற்குள் "நான் இந்த பக்கம் போய் பார்த்து விட்டு வருகிறேன்" என்று போனார். நான் அவர் போன பக்கத்துக்கு எதிர் பக்கம் போய் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆண்ட்டி கண் கலங்க  ஆரம்பித்து விட்டார். ஒரு வழியாக அசட்டு சிரிப்புடன் அங்கிள் வந்தார்.  வந்துட்டார் வந்துட்டார் என்று எல்லாரும் பேச,  வந்த அங்கிள் கேட்டாரே ஒரு கேள்வி "ஏன் இவ்வளவு டென்சன், இந்த கோச் இல்லேனா அடுத்த கோச்" என்றார்   கூலாக. எல்லோரும் கடுப்பாகிட்டோம். ஆண்ட்டிக்கு அங்கிள்-ஐ பார்வையாலேயே எரிக்க முடியாத கோபம்.


சற்று நேரத்தில் ஆண்ட்டி கோபம் குறைந்து அங்கிள் - இன் இமேஜை டேமேஜ் பண்ண ஆரம்பித்தார். இவர் இப்படிதான் என்று பழைய நினைவுகளை தூசி தட்ட ஆரம்பிக்க, அங்கிள் முகத்தில் அசடு டன் டன் ஆக வழிய ஆரம்பித்தது. உடனே எதிரே இருந்த இளம் மனைவி தன் கணவனும் அப்படிதான் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார். இந்த பெண்களே இப்படிதான் பேச்சு சுவாரசியத்தில் தங்களை தாங்களே டேமேஜ் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். சிக்னல்லுக்காக ட்ரெயின் அடிக்கடி நிற்கும்போது "அங்கிள் - ஐ வெளியே போயிட்டு வர சொல்லுங்க ஆண்டி. சீக்கிரம் வண்டியை எடுத்துடுவான்" என்று நாங்களும் எங்கள் பங்குக்கு அங்கிள் - ஐ வாரினோம்.  ஆண்டியும், அவர்கள் எதிரில் இருந்த தம்பதியும் மிக அன்யோன்யமாக ஆகி விட்டார்கள். ஆபத்து சமயத்தில் உதவி செய்பவர்கள் உற்ற நண்பர்களாகி விடுகிறார்கள்.  

அருகில் இருந்த இளைஞர்
============================
திண்டுகல்லில் அருகில் இருந்த இளைஞர் எங்களுக்காக தன் இடத்தை மாற்றிக்கொண்டு ஆண்ட்டி எதிரில் போய் அமர்ந்தார். அவ்வபோது எழுந்து நின்று மற்றவர்களுக்கும் இடம் கொடுத்தார்.  இடத்தை maintain பண்ணிக் கொண்டு  உட்க்கார்ந்திருந்தார் அன்று முதலில் குற்றம் சொன்ன என் மனது எப்போது அவரை வாழ்த்த ஆரம்பித்தது.


பெண் பேங்க் மேனேஜர்
=========================
விருத்தாசலம் சந்திப்பில் ஒரு பெண் பேங்க் மேனேஜர் ஏறினார். மிடில் ஏஜ் ஆகத்தான் இருந்தார். வாடிக்கையாக ஏறுபவர் போலிருக்கிறது. கொய்யா பழம் விற்கும் பெண் காசு வாங்காமல் அவர் கையில் ஆறு பழங்களை கொண்ட பையை திணித்து விட்டு சென்றாள். நாங்கள் ஆச்சர்யமாக அவரை பார்க்க நான் வாடிக்கையாக வருவேன். அந்த பெண்ணுக்கு நானும் ஏதாவது வாங்கி கொண்டு வந்து தருவேன், அதான் எனக்கு காசு வாங்க வில்லை என்றார். கொய்யா பழம் விற்கும் பெண்ணுக்காக நகரத்தில் இருந்து வாங்கி வரும் நல்ல உள்ளம் வாழ்க. வேலைக்கு சேர்ந்து 20 வருடங்களுக்குள் நன்றாக சேமித்து விடவேண்டும்,  இல்லை என்றால் என்னை போல் ஓடி கொண்டிருக்க வேண்டியது தான் என்றார். மாம்பலத்தில் வீடு,  விருத்தாச்சலத்தில்  வேலை.  காலையில்  3 .3 0 க்கு எழுந்து 6 மணிக்கு ட்ரெயின் பிடித்து பேங்க் போய் சேர  9   மணி  ஆகி விடும். மாலை 6  மணிக்கு கிலாம்பினால் வீடு சேர  9   அல்லது 10   மணியாகி விடும் என்றார். தினம் 4 .3 0  மணி நேரம் தூக்கம் தான் என்றார். மனது கஷ்டமாக இருந்தது. சரியாக பிளான் பண்ணாமல்  செலவளித்தால்  இந்த கதி தான் போலிருக்கிறது. 

இந்த பயணத்தில் கற்றதும்  பெற்றதும் 
=====================================
1 ) டிக்கெட்டை xerox  எடுத்து உங்களுடன் பயணம் செய்யும் குடும்ப உறுப்பினர்களிடம் கொடுத்து வையுங்கள்.
2 ) கொஞ்சம் காசையும் குடும்ப உறுப்பினர்களிடம் கொடுத்து வையுங்கள்.
3 ) யாரையும் இவர் இப்படிதான் என்று பார்த்தவுடன் முடிவு செய்யாதீர்கள். 
4 ) 20 வருடங்களுக்குள் நன்றாக சேமித்து விடுங்கள்.
5 ) சக பயணிகளிடம் உங்கள் பிரச்சனையை மெதுவாக சொல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்வார்கள். 
6 ) இவர்கள் ஒருவர் பெயர் கூட எனக்கு தெரியாது, இருந்தாலும் அவர்கள் எனக்கு ஆசான்கள்.  

இது என் முதல் பதிவு உங்கள் உண்மையான விமர்சனங்களை  வரவேற்கிறேன்.  வோட்டு   போட மறக்காதீர்கள். நன்றி !