Friday, April 6, 2012

சத்குருவுடன் ஒரு காலை


 கடந்த புதன் கிழமை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த சத்சங்கத்திற்கு அனுமதி சீட்டு கிடைத்தது.காலை 6 .30 மணிக்கு ஆரம்பம். நான் சூளைமேட்டில் இருப்பதால் காலை 5 .30 க்கு எழுந்து ரெடியாகி 6 .15 க்கு  எல்லாம்    சென்று விட்டேன்.
 
வாசலிலேயே தன்னார்வ தொண்டர்கள்  பைக் நிறுத்த இடத்தை காட்டினார்கள்.  ஒரு படி மேலே சென்று நிறுத்த உதவி செய்தார்கள்.  நிறுத்தி விட்டு வள்ளுவர் கோட்டம் வாயிலுக்கு வந்தால் கிட்டத்தட்ட 100  பேருக்கு  மேலாக  இருபுறமும்  நின்று வணக்கம் சொன்னார்கள். எனக்குதான் சொல்கிறார்களா என்று சுத்தி முத்தி பார்த்து கொண்டேன்.  எனக்கே எனக்குதான்.
 
18  வயது இளைஞன் முதல்  60 பெரியவர்  வரை என்னை கை கூப்பி  வரவேற்றனர். திரும்ப கை கூப்ப எனக்கு கூச்சமாக இருந்தது.  மனிதர்களை  பார்த்து கை  கூப்பும் வழக்கமே மறந்து விட்டது தெரிந்து மனம் வருந்தினேன்.  இனிமேல் வீட்டிற்க்கு வரும் பெரியவர்களை கை கூப்பி வரவேற்பது என்று முடிவு செய்தேன். கிட்ட தட்ட 150   மீட்டருக்கும்   மேலாக இருபுறமும் கை கூப்பி நின்று வரவேற்றனர்.
 
உள்ளே போனால் செருப்பு போடும் இடத்தை பகுதி பகுதியாக பிரித்து அதற்க்கு
 நம்பர் போட்டிருந்தார்கள்.தொண்டர் ஒருவர் "உங்கள் பகுதி எண்ணை நியாபகம்  வைத்து கொள்ளுங்கள். திரும்ப  வந்து எடுக்கும்போது சீக்கிரமாக  எடுக்க முடியும்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். செருப்பு   வைப்பதற்கு  சாக் பீசினால் கோடு போட்டிருந்தனால் ஒழுங்கான வரிசையில் 
செருப்பை வைக்க முடிந்தது. நிறைய திட்டமிடல் இதற்கு தேவை.
 
அதற்குள் அரங்கம் நிரம்பி இருந்தது. அரங்கத்தை சுற்றி இருக்கும் இடத்தில் அமர வைக்க பட்டோம். அது தவிர ஸ்டேஜை கவர் செய்து வெளியே  ஒளிபரப்பிக்கொண்டு இருந்தனர். நான் அமர்ந்தபோது ஈசாவின் பாடல்கள் இசைத்து கொண்டிருந்தார்கள். "நெத்திலி மீனுக்கென்ன ஆச திமிங்கலம்     போல ஆக ஆச, ஏலேலோ ஐலசா ஏலேலோ" என்ற பாட்டு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. கூட்டமும் தன்னை மறந்து கை தட்ட தொடங்கியது. இடையிடையே "அமர்ந்த இடத்திலே அமரலாம். செல் போனை அணைத்து விடலாம். தேவை இல்லாத அங்க அசைவுகள்   வேண்டாமே" என்று ஆணை  இடாமல் ஆலோசனை சொல்லும்  தொனியில்  சொல்லி கொண்டிருந்தார்கள். 
  
சிறிது நேரத்தில் கூட்டம் பரபரப்பாகியது. நான் அமர்ந்த இடத்துக்கு  70  மீட்டர்  முன்னால் இருந்த படிகளில் தான் மேடைக்கு வருகிறவர்கள் ஏறி  வர  வேண்டும். அந்த படிகளை பார்க்க முடியாதவாரு  ஒரு   துணியால்   தடுத்து இருந்தனர். அதனால் ஏறுபவர்கள் உடனே நம்  கண்ணுக்கு தெரிய  மாட்டார்கள். அவர்கள் மேலே ஏற ஏற சிறிது சிறிதாக தெரிவார்கள். முதலில் 
அவருடைய தலைபாகை,நெற்றி , முகம், தாடி, சால்வை   போர்த்திய  தோள்கள் என்று சிறிது சிறிதாக தெரிந்து பிறகு முழு உருவம் தெரிந்தது.  குரு தரிசனம் இவ்வாறு நிகழ்ந்தது.
 
அவர் மேடைக்கு வந்த பிறகும் இசைத்து கொண்டிருந்த பாடலை உடனே நிறுத்தாமல் சாதரணமாக பாடி முடித்தனர். இதுதான் ஈஷா ஸ்டைல். 
அவர் மேடையில் வந்தவுடன் நிறைய ஆ வூ ஏய் என்று சிலர் சத்தமிட்டு 
உடலை முறுக்கி கொண்டு ஆட ஆரம்பித்தனர். எங்கள் ஊர் மாரியம்மன்  திருவிழாவில் அருளாடுபவர்கள் நியாபகம் வந்தார்கள். எனக்கு இது மாதிரி சத்சங்கத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.எனக்கு என்ன இப்படி இருக்கிறது என்று நினைத்தேன்.
 
குருவின் முதல் வார்த்தையே "ஆன்மீகம் என்றால் ஆர்ப்பாட்டம் என்று  நினைத்து கொள்கிறார்கள்" என்று என்று அப்படி ஆடியவர்களை  பார்த்து  சொன்னார். ஈஷா தொண்டர்கள் அப்படி ஆடியவர்களிடம் சென்று
அப்படி ஆடக்கூடாது என்று சொன்னார்கள்.  ரெண்டே நிமிடத்தில் அந்த ஆர்ப்பாட்டம்  நின்று விட்டது. :-) தேவை இல்லாத அங்க அசைவுகள் என்று இதைதான் சொன்னார்கள்  போலிருக்கிறது.  
 
அதற்கப்புறம்  சுமார் 20  நிமிடங்கள்  குருவின் உரை இருந்தது. ஈஷா ஆரம்பித்து 30 வருடங்களாகியும்  தன்னால் நிறைய பேரை நல்வழி  படுத்த முடியவில்லை என்று வருத்தப் பட்டார். ஈஷா ஆரோக்யா ஏன் என்று  சொன்னார்.உங்களில் இவ்வளவு பேருக்கு தானா சர்க்கரை நோய் இருக்கிறது, ஓ இது ஈசாவின் கூட்டம் அல்லவா என்று சந்தோசப் பட்டார்.
 
பிறகு கேள்வி நேரம் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்க அவர் பதில்  சொன்னார். கற்றுக்க் கொண்ட யோகாவை மறக்காமல் செய்ய முடிவு  செய்தேன்.    அன்றைய பொழுது சத்குருவுடன் இனிதே புலர்ந்தது.