Wednesday, March 28, 2012

உண்மை சம்பவம் : எதிரில் எதிரி

உண்மை  சம்பவம் : எதிரில் எதிரி

டிடிங்,டிடிங் என்று அழைப்பு மணி அலறியது.
சமயலறையில் வேலையில் இருந்த இருந்த சுகுணா சேலை தலைப்பில் கையை துடைத்தவாரே கதவை திறந்தாள். எதிரில் எதிர் வீட்டு துர்கா கோபத்துடன் நின்றாள். இவள் எதற்கு என் வீட்டு கதவை தட்டுகிறாள் என்று நினைத்தவாரே "என்ன ?" என்றாள்.

"நீ தான் என் வீட்டு கொடியை கழட்டின்னாயா ?"
"அது உங்க வீட்டு கொடியின்னு எனக்கு தெரியாது, ரொம்ப உயரம் குறைவாக இருந்தது. கட்டியிருந்த கொம்பும் உடைந்து இருந்தது. அதனால்தான் கழட்டி வைத்தேன்" என்றாள் சுகுணா.  

அதெப்படி நீ கழட்ட போயிற்று என்று பிடித்து கொண்டாள் துர்கா. எட்டு வீடு கேட்கும் படி காச்சு காச்சு என்று காச்சி எடுத்து விட்டு தான் அடங்கினாள்.
 சுகுணா எவ்வளவோ தான் வேணுமென்றே செய்யவில்லை என்றாலும் துர்கா கேக்கவில்லை. 

பிளாஷ் பேக்  
 சுகுணாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. எப்படி இருந்த துர்க்கா இப்படி ஆகிவிட்டாள். துர்க்கா மூடி டைப் தான். எதிர் வீடாக இருந்தாலும் வந்த புதிதில் சுகுணாவிடம் முகம் கொடுத்து பேச ஆரம்பிக்க வில்லை. "ஒருத்தி எதுத்த வீட்டில் இருக்கிறவங்க கிட்ட பாத்து சிரிக்க  கூடவா மாட்டா?" என்று கணவனிடம் அங்கலாய்தாள். மேல் வீட்டில் இருக்கும் ஜமுனா மூலமாகத்தான் மெதுவாக பேச ஆரம்பித்தாள். துர்காவின் மகன் ஒரு தடவை சுகுணாவின் குழந்தைகள் படிக்கும் போது அதை கெடுப்பது போல வீட்டுக்குள் வந்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தான்.
 அது சுகுணாவுக்கு பிடிக்காமல் "நீ போய் நாளைக்கு வா விளையாட"   என்று சொல்லி அவனை அனுப்பி கதவை சாத்தினாள். அது முதல் துர்கா சுகுணாவிடம் பேசவில்லை. சுகுணாவே துர்கவிடம் போய் "நான் என்ன தப்பு செய்தேன்னு இப்படி இருக்கீங்க?" என்று கண் கலங்க கேட்ட போது "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று சொன்னாலும் துர்கா பேசவே இல்லை.     

துர்காவின் கணவர் சேகர் ஆப்டெக்கில் பிரான்ச் மேனேஜர் ஆக இருந்தார். ஒரு பையன் துர்காவிற்கு. சேகர் ஒரு மாருதி வண்டி வைத்திருந்தார்.  அதை தினமும் காலையில் வாக்கிங் முடிந்த பிறகு கழுவி துடைத்து பிறகே மற்ற வேலை செய்வார். கேட்டால் நம்ம வண்டிய வச்சுக்கிற அழகப் பார்த்தாலே நம்ம எப்படின்னு தெரியனுங்க " என்பார். சுகுணாவிடமும் நன்றாக பேசுவார்.

துர்க்கா வந்து கத்தி விட்டு சென்ற பிறகு அழுகையுடன் தன் கணவருக்கு
போன் பண்ணி ஒரு பாட்டம் அழுது விட்டு நடந்ததை சொன்னாள்.
சுகுணாவின் கணவன்  தான் வந்து சேகரிடம் பேசுவதாக சொன்னான். அதுவும் சுகுணாவுக்கு நல்லதாக பட்டது. துர்கவிடம்  தன் கணவன் பேசி  அவனுடனும் ஒரு சண்டை போட்டாலும் போடுவாள்.சேகரிடம் பேசுவதே நல்லது என்று நினைத்துக்கொண்டாள்.

மறு  நாள் சேகர் காரை துடைத்து விட்டு வரும் போது சுகுணாவின் கணவன் சேகரை பார்த்து நடந்ததை சொல்லி, சாதாரண விஷயத்துக்கு இப்படி
ஓவர் ரியாக்ட் பண்ண வேண்டாம் என்று சொல்லி இனி ஏதும்
பிரச்னையென்றால் சேகர் தன்னிடமே சொல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டான். சேகரும் தன் மனைவியிடம் எடுத்து சொல்வதாக சமாதானம் சொன்னான்.
 
துர்க்கா அழுகை
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் சேகர் பெங்களூர் ஆபீஸ் டூர் சென்ற சமயமாக
துர்க்கா  சுகுணாவின் வீட்டை தட்டி சுகுணாவின் கணவனிடம்

"நீங்க என் வீட்டுகாரரிடம் என்ன பேசினீங்கன்னு தெரியல, உங்களால  எங்களுக்குள்ள பெரிய சண்டை" 

"நான் அன்னிக்கி நடந்த விஷயத்தை பத்தி தான் சொன்னேன். இனிமே 
எதுவானாலும் உங்க வீட்டுக்காரர் என்கிட்டே சொல்லட்டும்ன்னு தான் சொன்னேன்"    

"என் வீட்டுக்காரர் என்கிட்டே இப்படி சண்டை போட்டதே இல்லை. உங்களால் என் வாழ்கையே நாசமாயிடும் போல இருக்கு"  என்றாள். 

பிரச்னை வேறு மாதிரி செல்வதை அறிந்தவன் "சரி என்னால் உங்களுக்குள் பிரச்னை வேண்டாம். நான் சேகர் வந்ததும் பேசுகிறேன்" என்றான்.

ஒரு வாரம் கழித்து துர்க்கா வீட்டில் இருந்து "டொம்  டொம்மென்று சத்தம் கேட்டது. சேகர் இன்னும் பெங்களூரில் இருந்து திரும்பி இருக்கவில்லை. ஆனால் வீட்டில் ஆளரவம் தெரிந்தது. வேலையாட்கள்  சிலர்  பெட் ரூமில் இருக்கும் AC  யை கழற்றி கொண்டு இருந்தனர். அவர்களிடம் 
விசாரித்த போது "வீடு மாத்துராங்கமா" என்று சொல்லி விட்டு நடையை  கட்டினர்.

துர்காவின் அண்ணன்கள் வந்திருப்பது தெரிந்தது. மாலைக்குள் அனைத்தையும் 
காலி பண்ணி விட்டு போய் விட்டாள். இரவு வந்த கணவனிடம்  "என்னால்தான் அவள் வீட்டையே காலி பண்ணி விட்டு போய் விட்டாள்" என்று அழுதாள் சுகுணா. அவள்  கணவனோ "விடு இதில் நம்ம தப்பு எதுவும்    இல்லை. சேகர் இப்படி சண்டை போடுவார்ன்னு நமக்கு தெரியவா  செய்யும். எங்க இருந்தாலும் அவங்க ரெண்டு பெரும் நல்லா இருக்கட்டும். தினம் தினம் சண்டைக்காரி முகத்தில் முழிக்கிற கொடுமையாவது  இப்போ இல்லை " என்று சொன்னான்.                 

ஷாக்கான சேகர்   
இது நடந்து முடிந்த பிறகு வந்த சனி கிழமை சேகர் பெங்களூரில் இருந்து  வந்து இறங்கினார். சரி முழுவதும் காலிபண்ணவில்லை  போலிருக்கிறது. 
மிச்சம் இருப்பதை எடுத்து கொண்டு  போறார் என்று நினைத்தாள்  சுகுணா. சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த  சேகர் பேய்  அறைந்தவனை போல்  போன் மேல் போன்  போட்டு யாரிடமோ பேசினான். பின்பு சுகுணாவிடம் வந்து "துர்க்கா எங்கே போறேன்னு சொல்லிட்டு போனாளா ?" என்று கேட்கவும் சுகுணாவிற்கு தூக்கி வாரி  போட்டது  "என்னது வீடு காலி பண்ணியது உங்களுக்கு  தெரியாதா?" என்று கேட்டாள். "எனக்கு   எதுவும் தெரியாது அன்னைக்கு  போனவன்   இப்போ தான்   வரேன்"  என்றான். சரியாய் போச்சு என்று துர்க்கா வந்து தன் கணவனிடம் பேசியதை சொன்னாள். "நானும் கொஞ்சம் ஹார்ஷ் ஆக  பேசிட்டேன்" என்றான் சேகர். சரி இப்படி ஆனாலும் அவங்க அம்மா வீட்டுக்கு தான் போய் இருப்பாள் போய் கூட்டி  வாருங்கள் என்றாள் சுகுணா. 

சுகுணாவுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. "இப்படியா ஒருத்தி
புருஷனுக்கு தெரியாம வீட்டையே காலி பண்ணிட்டு போவா?" என்று பினாத்தி கொண்டிருந்தாள். போன சேகர் திரும்பி வந்தார் தனியாக.
கேட்டபோது துர்கா தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும், அவளுடைய 
அண்ணன்கள் தான் அவள் உன்னுடன் வாழ மாட்டாள்  என்றும்,  அவன் மீது வரதட்சணை கொடுமை பண்ணியதாக போலீசில் புகார் பண்ணி 
இருப்பதாக சொன்னார். தன் மகன் கூட தன்னிடம் சரியாக பேசவில்லை 
என்றார். என்னடா தலை வலி போய் திருகு வலி வந்த கதை ஆகி  விட்டதே என்று நினைத்தாள் சுகுணா. சேகர் தன் துணியை மட்டும் விட்டு விட்டு தன் கார் மற்றும் பைக்கை கூட எடுத்து சென்று விட்டாள் என்று சொன்னார்.  

உண்மை தெரிந்தது            

துர்க்கா சுகுணாவிடம் தான் சண்டை போட்டிருந்தாலும் மேல் வீட்டு ஜமுனாவிடம் நல்லா பழகி கொண்டு இருந்தாள்.  இந்த களேபரம் எல்லாம் முடிந்து ஒரு நாள் ஜமுனா சுகுணா வீட்டிற்க்கு சென்று "உங்களுக்கு விஷயம் தெரியுமா  ?" என்று ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன விவரம் இதுதான் "சேகர் ஒரு செலவாளி. வாங்கும்    சம்பளத்துக்கு   ஏற்ப குடும்பம் நடத்தாமல், கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல்  லோன் வாங்கி செலவு செய்கிறானாம். இருக்கின்ற கார் பைக் கூட அதில் வாங்கியது தானாம். அவன் சென்னைக்கு  வந்ததே ஊரில் வாங்கிய  கடனை  அடைக்கத்தான். ஆனால் அவன் இங்கும் எல்லா பாங்கிலும் பர்சனல் லோன் வாங்கி இருக்கிறான். அதனால் தான், துர்கா எல்லாத்தையும் வழித்து  எடுத்துக்கொண்டு  போய் விட்டாள்".

சுகுணாவால் நம்பவே முடியமில்லை சேகரா இப்படி. தினம் காரை சுத்தமாக
கழுவும் அவன் முகம் வந்து போனது. சுத்தம் காரில் மட்டும் தானா? 

பின் குறிப்பு

1) சேகருக்கும் துர்க்காவுக்கும் டைவேர்ஸ் ஆகி விட்டது.

2) பெங்களூர் போன சேகர் அதற்கப்புறம் சென்னை பக்கமே எட்டி  
    பாக்கவில்லை.

3) துர்கா திரும்பவும் சுகுணா இருக்கும் அதே ஏரியாவில் குடியேறி
    இருக்கிறாள். தனியாக வேலைக்கு போய் தன் மகனை படிக்க
   வைக்கிறாள்.

4) துர்காவின் மகனும் சுகுணாவின் குழைந்தைகளும் ஒரே பள்ளியில்  
    இப்போது படிக்கிறார்கள்.

5) இப்போதும் சுகுணாவின் வாசலில் "மேடம் எதிர் வீட்டில் சேகர்ன்னு
    ஒருத்தர் பர்சனல் லோன் வாங்கிட்டு கட்டவே இல்லை, உங்களுக்கு அவர் 
    அட்ரஸ் தெரியுமா ?" என்று பேங்க் ஏஜெண்டுகள் கேட்டு 
    கொண்டிருக்கின்றனர்.        

6) சேகர் பர்சனல் லோன் மூலம் பாங்குகளை ஏமாற்றி இருக்கும் தொகை 
     மட்டும் அறுபது லட்சம் 

இப்போது சொல்லுங்கள் சுகுணாவின் எதிரில் இருந்த எதிரி  துர்க்காவா  சேகரா?

No comments:

Post a Comment