Tuesday, February 28, 2012

நாட்டு நடப்பு : மின் விடுமுறை


*** நான் எந்த திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கும் அனுதாபி அல்ல. சாமானிய மனிதனாக இருந்து பிரச்சனைகளை நையாண்டி 
செய்வதும் நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்க 
வைப்பதும்தான் இந்த பதிவின் நோக்கம். கட்சி அனுதாபியாக இல்லாமல் ஒரு நிமிடம் பிரச்சனையை யோசித்து விட்டு படியுங்கள்***

சான்சே இல்லை. அம்மா ராக்ஸ். பரீட்சை விடுமுறைகிறிஸ்துமஸ்  
விடுமுறையை தான் எங்களுக்கு  தெரியும். மின் விடுமுறையும் அளித்த  அம்மாவுக்கு வணக்கம். இனிமே ஒரு பய அம்மா தமிழுக்காக  ஒண்ணும்  செய்யலேன்னு சொல்ல முடியாது. மின்விடுமுறை என்ற புது தமிழ்  சொல்லே அம்மாவால் உருவாகி இருக்கிறது. மின் தடை, மின் வெட்டு  என்று எதிர்மறை வார்த்தைகளை விட்டு விட்டு மின் விடுமுறை என்று நம்மை ஒரு கொண்டாட்ட உணர்வை தூண்டும் நேர்மறை வார்த்தையை
 உருவாக்கி தந்து இருக்கிறார்.

ஏற்கனவே சோகத்தில் இருக்கும் கோயம்புத்தூர், திருப்பூர்  ஆலை
முதலாளிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிய வில்லை. ஆனால்
படிக்கும் பிள்ளைகளை பாதிக்காமல் இருக்க டீசலுடன் ஜெனரேட்டர் தர  இருக்கிறார். கந்தன் சாவடியை தாண்டும் பொது ஒரு ப்ளெக்ஸ் பேனர்
"மாற்றம் தந்த அம்மா, ஏற்றம் தரும்  தலைவி"    என்றது.  உண்மைதான் பஸ் கட்டண ஏற்றம், மின் கட்டண ஏற்றம் என்று தினம்  தினம் ஏற்றமாகதான்  இருக்கிறது. வெற்றி  பெற்ற பின் குஜராத்தில் இருந்து  மின்சாரம் குதித்து வரும்காற்றாலை மின்சாரம் பறந்து  வரும் 
என்றவர்கள் பஞ்சாய் பறந்து விட்டார்கள்.


இங்கே எப்படி இருக்க குஜாரத்தில் மோடி கருங்கல்லில் இருந்து மின்சாரம் எடுத்து விடுவார்  போலிருக்கிறது. நர்மதா ஆற்றின் கால்வாய்களின் மேலே 1  கிலோ மீட்டர் தூரத்துக்கு சோலார் பேனல் வைத்து
மூடி இருக்கிறார்கள்.   இதனால் நான்கு நன்மைகள்.

1) சுத்தமான சுற்றுபுறத்தை பாதிக்காத மின்சாரம் கிடைக்கிறது.
2 ) அருகில் இருக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது.
3) முக்கியமாக கால்வாயில் ஓடும் நீர் சூரிய ஒளியால் ஆவியாவது தடுக்க படுகிறது. இதன் மூலம் 100 ,000  லிட்டர் நீர் ஒரு வருடத்தில் ஆவியாவது தவிர்க்கபடுகிறது.               
4) மிக முக்கியமாக கால்வாயின் மேல் பதிப்பதால் தனியாக நிலம்
கையகப்படுத்த வேண்டியதில்லை.  

மோடியை இந்த விசயத்தில் பாராட்டதான் வேண்டும். நம்ம கூவத்தை
சோலார் பேனல்  கொண்டு மூடினாலே போதும் போல இருக்கு. நாற்றமும் போகும் மின்சாரமும் கிடைக்கும். கொஞ்சம் யோசிங்கப்பா

சரி நம்ம இந்த விஷயத்தில் என்ன செய்யலாம்
 1 ) தேவை  இல்லாத AC ,Fan மற்றும் விளக்குகளை அணைக்கலாம்.

 2) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த  அதே குண்டு  பல்பு வைத்துக்கொண்டு பல்பு வாங்காமல், CFL விளக்குகளை பயன் படுத்தலாம்.
இதற்கு ஆகும் மின் செலவு குறைவு. என்னோட சாய்ஸ் Philips தான்.
 ஒரு வருட வாரண்டியும் உண்டு.   இருபதே வாட்டில் ஒரு அறையை ஒளிர செய்யலாம்.

3) தொலைக்காட்சியை ரிமோட் கொண்டு மட்டும் அணைக்காமல், அதற்கு வரும் மின்சாரம் கொடுக்கும் சுவிட்சையும்   சேர்த்து அணைக்கலாம். இது நாம் அனைவரும் செய்யும் தவறு.

4) குளிர் காலங்களில் AC யை குறைத்து வைக்கலாம். குறிப்பிட்ட நேரம் மட்டும் இயங்குமாறு வைத்து கொள்ளலாம்.

5) LED லைட்களை  கைவிளக்குகள், கழிவறையில் மற்றும் குளிக்கும்
அறையில் உபயோகிக்கலாம்.

6) ஏதோ ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளை கொடுத்ததாக தொலைக்கட்சியில் காட்டினார்கள். அது
மாதிரி வாங்கி வைத்து கொள்ளலாம்.

7)  வெயில் இப்போதே சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. ஹீட்டர் போடாமல் குளித்து பழகலாம்.        

8) சாலை விளக்குகள் விடிந்த பின்னும் எரிந்தால் மாநகராட்சிக்கு தொலை பேசியில் சொல்லலாம். மாநகராட்சியும் சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகளை அமைக்கலாம்.


மின் உபயோகத்தில் பொட்டி தட்டும் கம்பனிகளுக்கு   பெரும் பங்கு உண்டு. அதனால் மின்சிக்கனத்திலும்  அவற்றிக்கு பங்கு உண்டு.  பொட்டி தட்டும் கம்பெனிகள் என்ன செய்யலாம் 

1) முடிந்த வரை தொழிலாளர்களை வீட்டிலிருந்து மடிக்கணினி மூலம் 
வேலை செய்ய அனுமதிக்கலாம். இதனால்  விளக்குகளுக்கு, கணினிக்கு ,
 AC க்கு மற்றும் லிப்ட்க்கு ஆகும் மின்சாரம் மிச்ச படுத்தப்படும்.  வாகன நெரிசலும்   கணிசமான அளவு குறையும்.     

2 ) குளிர் காலங்களில் AC யை குறைத்து வைக்கலாம். 

3) ஆள் இருந்தால் மட்டும் எரியும் விளக்குகளை உபயோகிக்கலாம்.   

4) வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் AC யை நிறுத்தி விடலாம். 

5) வீட்டிற்கு கிளம்பும்போது கணினியை அணைத்து விட்டு போவதை
கட்டாயமாக்கலாம்.  

6)  நிறைய இடம் இருக்கும் கம்பெனிகள் சூரிய சக்தி மூலம் மின்சாரம்
 தயாரிக்கலாம். 

எவ்வளவு தான் நானே சொல்லுறது நீங்களும் தெரிந்தவற்றை சொல்லுங்கள். 


அடுத்த பதிவு பு(து)த்தகம் - நான் படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்  

No comments:

Post a Comment