அருப்புகோட்டையில் இருக்கும் என் அம்மாவை கூட்டிகொண்டு என் அக்கா வீட்டில் விடுவதற்காக பொதிகையில் சனிக்கிழமை சென்றேன். சீட்டை தேடி பிடித்து உட்கார்ந்த பிறகு பார்த்தேன், என் எதிரில் ஒரு அம்மா இருந்தார்கள். திடீரென்று ஒரு கை அப்பர் பெர்த்தில் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை அந்த அம்மா விடம் கொடுத்தது. அந்த அம்மா வாங்கி வைத்து கொள்வார்கள் அல்லது, தண்ணீர் குடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அதை திறந்து திரும்பவும் இந்தாப்பா என்று மேலே கொடுத்தார்கள். சரி ஏதோ ஐந்தாவது அல்லது ஆறாவது படிக்கும் பையன் போல இருக்குது, அதனால்தான் இவர்கள் திறந்து கொடுகிறார்கள் என்று நினைத்தேன். அவன் இறங்கி வந்த போது பார்த்தால் காலேஜில் முதல் அல்லது இரண்டாம் ஆண்டு படிக்கும் பையன் போலிருந்தான்.அவனுக்கு ஒரு தண்ணி பாட்டிலை ஓபன் செய்ய கூடவா தெரியாது? வந்தவுடன் அந்த அம்மா பக்கத்தில் உட்கார்ந்து வசதியாக என் பக்கத்தில் காலை நீட்டிக் கொண்டான்.
கடுப்பு #1
எனக்கு எதிர் சீட்டில் காலை வைப்பது பிடிக்காது. எதிரில் பக்கத்தில் ஆள் உட்கார்ந்து இருந்தாலும் காலை வைத்துக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை. இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அம்மா கேட்க்கும் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொல்லிக் கொண்டு வந்தான்.
கடுப்பு #2
இப்போது தண்ணீர் பாட்டில் அந்த அம்மாவிடம் இருந்தது. அவன் சொடக்கு போட்டு அம்மாவை கூப்பிட்டு தண்ணீர் வேண்டும் என்று சைகையில் கட்டினான். எனக்கு சுர்ரென்று கோபம் ஏறியது. அந்த அம்மாவும் ஒன்றும் சொல்லாமல் தண்ணீர் பாட்டிலை அவனிடம் கொடுத்தார்கள். அந்த இடத்திலேயே அவனை கிழி கிழி என்று கிழித்து விடலாம் என்ற கோபத்தை கட்டுபடுத்தி கொண்டேன்.
எனக்கென்னமோ அவன் மேல் குற்றம் இருப்பதாக தெரிய வில்லை. இந்த மாதிரி ட்ரீட் பண்ணும் மகனை நாலு பேர் முன்னாலேயே "நான் என்ன உன் வீட்டு நாயா சொடக்கு போட்டு கூப்பிடுற?" என்று நடு தெருவில் வைத்து கிழி கிழி என்று கிழித்தால் அவன் நாளைக்கு அந்த மாதிரி கூப்பிடுவானா?
அடுத்த ஸ்டாப்பில் அவன் கிழே இறங்கி கோக் வாங்க சென்றான். மெதுவாக அந்த அம்மாவிடம் "அவன் உங்க பையனாமா? என்று கேட்டேன். அதற்க்கு ஆமாம் என்றார்கள். "என்னம்மா இது சொடக்கு போட்டு தண்ணி கேக்குறாரு
நீங்களும் ஒன்னும் சொல்லாம குடுக்கிறீங்க" என்றேன். "வீட்டிலேனா கண்டிப்பேன், இங்க எப்பிடி?" ன்னு சொன்னார்கள். "நம்ம பிள்ளைங்களுக்கு நாமதான் நல்லது பொல்லது சொல்லி வளர்க்கணும், இல்லையினா பின்னால வருத்த படுற மாதிரி ஆயிடும்" என்றேன்.
எனக்கு அந்த அம்மா வீட்டிற்க்கு சென்று கண்டிக்கிற மாதிரி தெரிய வில்லை. இப்படி மகனிடமும், கணவனிடமும்
தன்மானத்தை விட்டு விட்டு வாழும் கோடி கணக்கான பெண்களில் அந்த தாயும் ஒருத்தி.